வடக்கு-கிழக்கு சமஷ்டி அடிப்படையில் மதச்சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும்


இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தாம் நிராகரிப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நிராகரிக்கின்றீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது- நீண்ட காலமாக இலங்கையின் நிலப்பரப்பு யாழ்ப்பாண இராஜ்ஜியம், கண்டிய இராஜ்ஜியம், உருகுணு இராஜ்ஜியம் மற்றும் கரையோர இராஜ்ஜியம் என்று பல இராஜ்ஜியங்களாக ஆளப்பட்டுவந்தது. நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் ஆங்கிலேயர் 1833ம் ஆண்டு சகல இராஜ்ஜியங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முழு இலங்கைக்கென ஒரு தனிநிர்வாக அலகை உண்டாக்கினார்கள். இதனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருந்த மக்கள் முழு இலங்கையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டார்கள்இப்பொழுதும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர். முழு இலங்கையையும் சுதந்திரத்தின் போது ஆங்கிலேயர் இலங்கையரிடம் கையளித்துவிட்டுச் சென்றனர். சுதந்திரத்தின் போது இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை ஏற்றுக்கொண்ட எம் அரசியல் வாதிகள் அதிகாரம் கிடைத்த உடனேயே தாம் இலங்கையர் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டனர். சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், மலேயர் என தம்மைப் பிரித்துப்பார்க்கவும் சிந்திக்கவும் தொடங்கிவிட்டார்கள். பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்கள் சட்டங்களைப் பெரும்பான்மையினருக்கு ஏற்ற விதத்திலும் சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் விதத்திலும் பாத்தனர். அதனால் 1949ம் ஆண்டில் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு கொண்டு வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டம் தமிழ் அரச அலுவலர்களின் உரித்துக்களைப் பறித்தெடுத்தது. தரப்படுத்தல் எம் மாணவர்களின் உயர் கல்வியில் கை வைத்தது. அரச காணிக்குடி யேற்றங்கள் தமிழர் பாரம் பரியமாக வாழ்ந்த இடங்களை பிற இடங்களில் இருந்து கொண்டு வந்த பெரும்பான்மையினர் பறித்தெடுத்து குடியிருக்க உதவின. 1970ம் ஆண்டளவில் தான் திருகோணமலையைச் சுற்றி சிங்களக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின. பொலிஸார் மேலான அதிகாரம் மத்தியின் கைவசம் இருந்ததால் வடகிழக்கு மாகாணங்களில் சிங்களப் பொலிஸாரின் ஆதிக்கம் கூடியது. இராணுவத்தினரும் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது குறிப்பிட்ட சில பௌத்த வணக்கஸ்தலங்களை விட வேறெங்கும் பௌத்த கோயில்களோ, விகாரைகளோ இருக்கவில்லை. இப்பொழுது இராணுவ அனுசரணையுடன் பௌத்த வணக்கஸ்தலங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு வருகின்றன. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் அவை எழும்புகின்றன. போருக்குப் பின்னர் தான், இது ஒரு ‘சிங்கள பௌத்த நாடு’ என்ற குரல் ஆவேசமாக ஒலித்து வருகின்றது. சரித்திரம் பிழையாக எடுத்துரைக்கப்பட்டு இந்த நாடு ஒரு சிங்கள பௌத்தநாடு என்ற பொய்யான, பிழையான, தவறான கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். வடக்கில் எந்தக் காலத்திலுமே சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழவில்லை. தமிழ் பௌத்தர்கள் வடகிழக்கில் சிலநூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். இன்று இருக்கும் பௌத்த எச்சங்கள் அவர்களால் விடப்பட்டவையே. நாயன்மார்களின் பக்திப் பிரவாகம் மக்களை ஈர்க்கத் தொடங்கிய போது தமிழ் பௌத்தர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுவிட்டு முன் போல் சைவர்கள் ஆனார்கள். ஆகவே வடகிழக்கு பௌத்தத்தை வேண்டாம் என்று கைவிட்ட ஒருபிரதேசம். அங்குமீளவும் பௌத்தத்தை அதுவும் அரச உதவியுடன் திணிக்கப் பார்ப்பது வடகிழக்கு மக்களின் மனிதஉரிமைகளைப் பாதிப்பதானது. வடகிழக்கு மக்கள் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்லாதவர்கள். இப்போதிருக்கும் பௌத்தர்கள் கூட அரச உள்ளீட்டால் அண்மைக் காலங்களில் உள்ளேற்கப்பட்டவர்கள். ஆகவே இலங்கையை பௌத்தநாடென்றோ சிங்களநாடென்றோ கூறுவதை நான் வலுவாக நிராகரிக்கின்றேன். இப்பொழுதும் எப்பொழுதும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களே பெரும்பான்மையினராக இருந்துவந்துள்ளனர். தென்னிந்தியாவில் பௌத்தம் வளர்ச்சியடைந்த காலத்தில் இலங்கையின் வடகிழக்கிலும் பௌத்தம் வளர்ச்சி கண்டது.
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive