விஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்

நண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில் ‘வடக்கின் தீர்மானம் குப்பைத் தொட்டிக்குள்’ என்ற தலையங்கத்தின் கீழும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இது முற்றிலுந் தவறு. எனக்கு நன்றாக அறிமுகமான ஒருவரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் மேற்படி கூற்றை வெளியிட முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அவ்வாறில்லாமல் தவறான செய்திகளை முன்வைத்து தவறான கருத்துக்களை பாராளுமன்றத்தில் பதிய வைப்பது கவலைக்குரியதாக அமைகின்றது. பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டத்திற்குப் புறம்பாக, சட்ட அனுமதி பெறாமல், பலாத்காரமாகப் புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே நாங்கள் கண்டிக்கின்றோம். புத்தர் சிலையென்ன, இந்துத் தெய்வங்களின் சிலையென்ன, கிறீஸ்தவர்களின் சிலை என்ன வேறெந்த மதத்தவர் சிலையென்றாலும் சட்டப்படி அமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். தான்தோன்றித்தனமாக அமைத்தால் அதற்கு எங்கள் ஆட்சேபணையைத் தெரிவிக்கத் தயங்கவும் மாட்டோம். அமைச்சர் விஜேதாச அவர்களின் கூற்றுக்கள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கே ஆத்திரமூட்டியுள்ளன. சொல்லாததைச் சொன்னதாகக் கூறிக் குற்றஞ் சாட்டினால் யாருக்குத் தான் ஆத்திரம் வராது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயங்கள் எவ்வாறு சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, அதன் பின்னர் அவற்றுள் பெரும்பான்மையானவை மீளக் கட்டப்படவில்லை போன்றவை பற்றியெல்லாம் திரு.இராஜபக்ச அவர்கள் அறியாதவராக இருக்க முடியாது. இந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் தெற்கில் இந்துக் கோயில்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பௌத்தர் அல்லாதோர் வசிக்கும் இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த கோயில்களைத் தனியார் காணிகளில் கட்ட முற்படுவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் சிங்கள அகராதியின் ஆசிரியர் வணக்கத்திற்குரிய கலாநிதி அகுரடியே நந்தா தேரோ அவர்கள் வேறு இரு பௌத்த பிக்குமார்களுடன் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் கூட பௌத்தர் இல்லாதோர் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக புத்த சிலைகளை நிர்மாணிப்பதைத் தாம் கண்டிப்பதாகக் கூறினார்கள். சட்டப்படி மனுச் செய்து எந்த மதத்தினரும் உரியவாறு தமது வணக்கஸ்தலங்களை வடமாகாணத்தில் அமைக்கலாம். சட்டத்திற்குப் புறம்பாக அமைப்பது பற்றியே நாங்கள் கருத்துத் தெரிவித்தோம். நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive